சுப்பிரமணிய சர்மா
திருக்கோளூர்
பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே,
அது என்ன ரகசியம் ?
ரகசியம் ஏதும் இல்லை.
சாதாரண ஒரு மோர் விற்கும் அம்மையார்
வைணவ ஆச்சார்யார்
ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த
எண்பத்து ஒன்று
கருத்துக்கள்தான் இந்த ரகசியம்.
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருத்தலம் திருக்கோளூர். 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்று. தாமிரபரணிப் படுகையில் உள்ள நவ திருப்பதிகளிலும் ஒன்று. பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரின் ஜென்மஸ்தலம். திருக்கோளூர் என்றாலே ‘தேடிப் புகும் ஊர்’ என்கிறார்கள் ஆச்சார்யார்கள்.
அத்தகைய இந்த ஊருக்கு ராமானுஜர் வரும் ஓர் அதிகாலை வேளையில், மோர் விற்கும் அம்மையார் ஒருவர் வியாபாரத்திற்காக ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார். அதைக் கண்ணுற்ற ராமானுஜர், ‘புகும் ஊருக்கு நாங்கள் வரும் போது நீங்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறீர்களே’ என்று கேட்கிறார்.
அதற்கு, ராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்த அம்மையார், வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, ‘அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன்’ என்று பாண்டித்யமாக பதில் அளிக்கிறார்.
அந்த 81 வாக்கியங்களில் அவர் வைணவத்தைச் சாறாகப் பிழிந்து தருகிறார். அதைக் கேட்ட ராமானுஜர், சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அம்மையாரைப் பணிகிறார். பின்னாளில் அந்த அம்மையாரும் ராமானுஜரின் சீடராகிறார்.
இவர் கூறிய 81 வாசகங்கள் அதாவது ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ நமக்கு வைணவத்தை பொருத்த மட்டும் பாமரப் பெண்களும் கூட இந்த நாட்டில் மேதைகளாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது.
அந்த
எண்பத்து ஒன்றும் இதோ!!
அழைத்து வருகிறேன் என்றேனோ, அக்ரூரரைப் போலே!
அகமொழித்து விட்டேனோ, விதுரரைப்போலே!
தேகத்தை விட்டேனோ,
ரிஷி பத்தினியைப் போலே!
தசமுகனைச் செற்றேனோ,
பிராட்டியைப் போலே!
பிணமெழுப்பி விட்டேனோ, தொண்டைமானைப்போலே!
பிணவிருந்திட்டேனோ, கண்டாகர்ணனைப்போலே!
தாய்கோலம் செய்தேனோ,
அனுசூயையைப் போலே!
தந்தை எங்கே என்றேனோ, துருவனைப்போலே!
மூன்றெழுத்து சொன்னேனோ, க்ஷத்ரபந்துவைப்போலே!
முதலடியை பெற்றேனோ,
அகலிகையைப் போலே!
பிஞ்சாய்ப் பழுத்தேனோ,
ஆண்டாளைப் போலே!
எம்பெருமான் என்றேனோ,
பட்டர்பிரானைப் போலே!
ஆராய்ந்து விட்டேனோ,
திருமழிசையார் போலே!
அவன் சிறியனென்றேனோ,
அழ்வாரைப் போலே!
ஏதேனும் என்றேனோ,
குலசேகரரைப் போலே!
யான் சத்யம் என்றேனோ,
அழ்வாரைப் போலே!
அடையாளம் சொன்னேனோ,
கபந்தனைப் போலே!
அந்தரங்கம் சொன்னேனோ,
திரிஜடையைப் போலே!
அவன் தெய்வம் என்றேனோ, மண்டோதரியைப் போலே!
அஹம் வேத்மி என்றேனோ, விஸ்வாமித்திரரைப் போலே!
தேவுமற்றரியேனோ,
மதுரகவியாரைப் போலே
தெய்வத்தை பெற்றேனோ,
தேவகியைப் போலே!
ஆழிமறை என்றேனோ,
வசுதேவரைப் போலே!
ஆயனை(னாய்) வளர்த்தேனோ, யசோதையைப் போலே!
அநுயாத்திரை செய்தேனோ, அணிலங்கனைப் போலே!
அவல் பொரியை ஈந்தேனோ,
குசேலரைப் போலே!
ஆயுதங்கள் ஈந்தேனோ,
அகஸ்தியரைப் போலே!
அந்தரங்கம் புக்கேனோ,
சஞ்சயனைப் போலே!
கர்மத்தால் பெற்றேனோ,
ஜநகரைப் போலே!
கடித்து அவனைக் கண்டேனோ, திருமங்கயாரைப் போலே!
குடை முதலானதானேனோ, ஆனந்தால்வாழ்வான் போலே!
கொண்டு திரிந்தேனோ,
திருவடியைப் போலே!
இளைப்பு விடாய் தீர்தேனோ,
நம்பாடுவான் போலே!
இடைக்கழியில் கண்டேனோ, முதலாழ்வார்களைப் போலே!
இருமன்னரைப் பெற்றேனோ,
வால்மீகரைப் போலே!
இருமாலை ஈந்தேனோ, தொண்டரடிப்போடியார் போலே!
அவனுரைக்க பெற்றேனோ,
திருக்கச்சியார் போலே!
அவன்மேனி ஆனேனோ,
திருப்பாணரைப் போலே!
அனுப்பி வையுமேன்றேனோ,
வசிஷ்டரைப் போலே!
அடி வாங்கினேனோ,
கொங்கில் பிராட்டியைப் போலே!
மண்பூவை இட்டேனோ,
குரவ நம்பியைப் போலே!
மூலமென்றழைத்தேனோ,
கஜராஜனைப் போலே!
பூசக் கொடுத்தேனோ,
கூனியைப் போலே!
பூவைக் கொடுத்தேனோ,
மாலாகாரரைப் போலே!
வைத்தவிடத்து இருந்தேனோ,
பரதரைப் போலே!
வழி அடிமை செய்தேனோ, இலக்குவணனைப் போலே!
அக்கரைக்கே விட்டேனோ, குகப்பெருமாளைப் போலே!
அரக்கனுடன் பொருதேனோ, பெரியவுடயாரைப் போலே!
இக்கரைக்கே செற்றேனோ,
விபீஷணனைப் போலே!
இனியதென்று வைத்தேனோ,
சபரியைப் போலே!
இங்கும் உண்டென்றேனோ, பிரஹலாதனைப் போலே!
இங்கில்லை என்றேனோ,
திதிபாண்டனைப் போலே!
காட்டுக்குப் போனேனோ,
பெருமாளைப் போலே!
கண்டுவந்தேன் என்றேனோ,
திருவடியைப் போலே!
இருகையும் விட்டேனோ,
திரௌபதியைப் போலே!
இங்குபால் பொங்கும் என்றேனோ, வடுகனம்பியைப் போலே!
இருமிடறு பிடித்தேனோ, செல்வப்பிள்ளையைப் போலே!
நில்லென்று(னப்) பெற்றேனோ, இடையற்றூர்நம்பியைப் போலே!
நெடுந்தூரம் போனேனோ,
நாதமுனியைப் போலே!
அவன் போனான் என்றேனோ, மாருதியாண்டான் போலே!
அவன் வேண்டாம் என்றேனோ,
அழ்வானைப் போலே!
அத்வைதம் வென்றேனோ, எம்பெருமானாரைப் போலே!
அருளாழங் கண்டேனோ,
நல்லானைப் போலே!
அனந்தபுரம் புக்கேனோ,
ஆளவந்தாரைப் போலே!
ஆரியனைப் பிரிந்தேனோ, தெய்வவாரியாண்டானைப் போலே!
அந்தாதி சொன்னேனோ,
அமுதனாரைப் போலே!
அனுகூலம் சொன்னேனோ,
மால்ய்வானைப் போலே!
கள்வனிவன் என்றேனோ,
லோககுருவைப் போலே!
கடலோசை என்றேனோ,
பெரியநம்பியைப் போலே!
சுற்றிக்கிடந்தேனோ,
திருமாலையாண்டான் போலே!
சூலுறவு கொண்டேனோ,
திருக்கோட்டியூரார் போலே!
உயிராய பெற்றேனோ,
ஊமையைப் போலே!
உடம்பை வெறுத்தேனோ,
திருனறையூரார் போலே!
என்னைப்போல் என்றேனோ,
உபரிசரனைப் போலே!
யான் சிறியன் என்றேனோ, திருமலைநம்பியைப் போலே!
நீரில் குதித்தேனோ,
கணப்புரதாளைப் போலே!
நீரோருகம் கொண்டேனோ,
காசிசிங்கனைப் போலே!
வாக்கினால் வென்றேனோ,
பட்டரைப் போலே!
வாயிற் கையிட்டேனோ,
எம்பாரைப் போலே!
தோள் காட்டி வந்தேனோ,
பட்டரைப் போலே!
துறை வேறு செய்தேனோ,
பகவரைப் போலே!
***************************************************************************************
பாதி விழிப்பில், கை துளாவலில்
இன்மை உணர்ந்தும்,
உலாவித் திரும்பக் கூடும்
என்றெண்ணி உறக்கம் தொடர்ந்தாயா?
அங்கும் இங்கும் எங்கும் இல்லை
என்று ஊர்ஜிதம் செய்த பின்பும்
நடந்ததை நம்ப மறுத்தாயா?
கடந்து செல்வதா, காத்து நிற்பதா
எனக் கலங்கி நின்றாயா?
உனைப் போல் சாலப்பரிந்து
உவகை அளிப்பவர் யாருமின்றி
வாடவும் கூடுமென்றெண்ணி
தத்தளித்தாயா?
பிரிய கால நினைவுகள் அனைத்தும்
பொக்கிஷமென அசை போட்டு சுகித்தாயா?
இல்லை, கரம் விழுந்த செங்கனல் துண்டென்று
சடுதியில் உதறிக் களைந்தாயா?
அடுத்து வந்த வசந்தங்கள் அனைத்தும்
தாபமும் தவிப்புமின்றி
சினத்தால் நிறைத்து கடந்தாயா?
எதிர்கொள்ள நேருங்கால் கேட்பதற்கென
வினாக்கள் பல சுமந்தலைந்தாயா?
இல்லை என்றேனும் தவறியும் சந்திப்பதாகாது
என சற்றே மறைந்து வாழத் தலைப்பட்டாயா?
அருகன் அருமை பெருமைகள்
உன் செவி சேர்ந்த கணத்தில்
சிற்றலை தழுவிய பாதமென சிலிர்த்தாயா?
இல்லை நரகல் பட்ட அசூசையில் மெல்ல நகர்ந்தாயா?
விடை கொடு என்றொரு வார்த்தைக் கூறியிருப்பின்
வாழ்த்தி வணங்கி வழிவிட்டு ஒதுங்கிடும்
உன் மாண்பறியாது நீங்கிய கோழைத்தனந்தனை
ஒரு கணமேனும் மன்னிக்க விழைந்தாயா?
இல்லை மறக்க நினைத்தாயா?
என்னவெல்லாம் செய்துன்னை வென்றாய்
எம் தாயே யசோதா!!!!!
- ஶ்ரீதேவி ரம்யா
******************************************************************
நீங்கள் என்னை சூத்திரன்
என்றழைத்தபோது.?
என் கையில் சவரக் கத்தி
இருந்தது.
என் கையில் பிணமெரிக்கும்
கட்டை இருந்தது.
அனல் தின்னும் பறை காய
தீக்குச்சி இருந்தது.
பல புதுச் செருப்புகள் தைத்தே
இருந்தது.
நீங்கள் நம்பிக் காட்டிய
குரல்வளையை
கிழித்தாரில்லை.!
தன்னந்தனி சுடுகாட்டில்
பயந்துபோய்
வந்தாரில்லை..!!
நீங்கள் எரித்தீரென்று
பதிலுக்கு
எரித்தாரில்லை..!!!
கண்டதும் கழட்டச் சொன்னீர்
செருப்பை - இருந்தும்
கிழிந்த உம் செருப்பை
தைக்காதவரில்லை.?
இன்றோ பேனா பிடித்துவிட்டோம்.
பிரபஞ்சம் சுற்றுகின்றோம்.
ஜில்லெட் கொண்டு
சிரைத்துக்கொள்.!
மின் சுடுகாட்டில்
சாம்பல் அள்ளு.!!
சத்தமில்லாமல்
காடு சேர்..!!!
கிழிந்தால் தூக்கியெறி.
உனக்கும் எனக்கும் ஒரே
வடிவ 'தீ' தான்
கனன்று கொண்டிருக்கிறது
-வினையன்
************************************************************
*****************************************************************************