வெள்ளி, 16 ஜூன், 2017

நாங்க அப்பவே அப்படித்தான்!

    1984. எம்ஜியாரின் ஆட்சிக்காலம். நான்கு சட்டமன்ற இடத்துக்கான இடைத் தேர்தல். திமுக தலைவர் கருணாநிதியின் விலகலால் அண்ணாநகர், திமுக
உறுப்பினர் மாயவரம் கிட்டப்பா மறைவின் பொருட்டு, மாயவரம் இன்றைய மயிலாடுதுறை,   மற்றொரு திமுக உறுப்பினர் N.நடராஜன் மறைவின் காரணமாக தஞ்சாவூர், மற்றொரு உறுப்பினரின் விலகல் காரணமாய் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்டது.
   

    தேர்தல் முடிவு இரு கட்சிகளுக்கும் இணையாக அமைந்தது. அண்ணாநகர் மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளைத் திமுகவும், தஞ்சை மற்றும் உப்பிலியாபுரம் ஆகிய தொகுதிகளை அதிமுகவும் என்ற வகையில் தாங்கள் வென்ற தொகுதிகளைத் தக்க வைத்துக்கொண்டன.


   இதில் சென்னைவாசியான, திமுக வெறிகொண்ட* இளைஞனான நான் உள்வாங்கிய அண்ணாநகர் தொகுதியின் சில சம்பவங்களைப் பதிவிடவே இப்போதைய எண்ணம்.

   அண்ணாநகர் தொகுதியானது மேற்குப் பக்கம், உள்ள 11வது மெயின் ரோடு எனும் அப்போதைய பேருந்து நிறுத்துமிடத்தோடு முடிந்துவிடும். அதற்கடுத்து திருமங்கலம் பகுதி தொடங்கிவிடும். நானும் எனது நண்பனும் அப்போது அந்தப் பகுதியில்தான் இருந்து வந்தோம். நாங்கள் இருவருமே திமுகவினர் என்பதால் பக்கத்துத் தொகுதியில் இடைத் தேர்தல் எப்படித்தான் நடைபெறுகிறது என்பதையும் இயக்கத்துக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது என்று மனச்சாந்தி பெறவும் எனது சைக்கிளை எடுத்துக்கொண்டு, போலியோவால் பாதிக்கப்பட்ட என் நண்பனையும் பின்னால் அமரவைத்து, தொகுதியின் துவக்கப் பகுதியைக் கடந்து சற்று முன் சென்று ப்ளூஸ்டார் என வழங்கும் பகுதியை வந்தடைந்தோம்.

   இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சார்பில் பி.எல். இராதாகிருஷ்ணனும், திமுக சார்பில் சோ.மா. இராமச்சந்திரனும் போட்டியிட்டனர். 
  எங்களுக்கு ஒரே பிரமிப்பு; சாலையெங்கும் அலங்கார வளைவுகளும், கொடிகளும் தோரணங்களும், தொண்டர்களின் இடைவிடாத, வாக்களிக்க  வேண்டிய  வாக்காளர்களைத் திரட்டுதலும் என அட்டகாசப் படுத்திக் கொண்டிருந்தனர் அனைவரும் அதிமுகவினர்; அமைச்சர்களும் அடங்குவர். அருகில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியின் ச.ம.உ. JCD பிரபாகரன்தான் உள்ளூர் முக்கியப் பிரமுகர்.

    எதையோ பறிகொடுத்தபடியான எண்ணத்துடன் நாங்கள் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரி அருகே சென்றோம். அங்கே அதன் எதிரே உள்ள கல்யாண மண்டபங்களெல்லாம் அதிமுக மந்திரிகளின் கைவசத்தில்; அங்கிருந்துதான் உணவு மற்றும் கொடிகள், வாக்கு விவரத்தாள்கள் (door slip) என அனைத்தும் உள்ளே வருவதும் போவதுமாக! ஆச்சரியம்தான்! இவ்வளவுக்கும் எந்தவிதமான ஆர்பாட்டங்களும் இல்லாமல் திமுகவின் பணிகள் நடந்தவண்ணம்தான் இருந்தது.

   இந்த அத்துமீறல்களையும் மீறி நாம் எப்படி வெல்லப் போகிறோம்? நண்பன் புலம்பத் தொடங்கிவிட்டான்; அவனை சமாதானப்படுத்த, மிதிவண்டியை அமைந்தகரை நோக்கி செலுத்தினேன்! ஒரு இடத்தில் நிறுத்தி தேநீர் அருந்தினோம்; பிறகு அங்கிருந்து, சில வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வந்த செயின்ட்.ஜார்ஜ் பள்ளியின் முகப்புக்கு வந்தோம் (பச்சயப்பன் கல்லூரி எதிரில்).  பூந்தமல்லி நெடுஞ்சாலையின் ஓரம் இருந்த அந்தப் பள்ளியின் முக்கிய வழியின் இரு பக்கமும் உள்ள நடைபாதையில், சற்றுத் தள்ளி, ஒருபுறம் திமுகவின் அலுவலகமும் மற்றொரு புறம் அதிமுகவின் அலுவலகமும் கீற்றுக் கொட்டகைகளில் அமைந்திருந்தன. நாங்கள் திமுக கொட்டகையை ஒட்டி, அவர்களின் செயலை கவனித்தபடி இருந்தோம்.

     உள்ளூர் தலைவர் ஒருவர் எங்களைப் பார்த்ததும் என்ன ஓட்டு போட்டுவிட்டீர்களா என்று கேட்டார். நாங்கள் திருமங்கலத்திலிருந்து வந்துள்ளோம்; நம் கட்சியின் வெற்றி நிலவரத்தை புரிந்துகொள்ள, என்று சொன்னோம். உடனே அவர் நம்ம ஆளுங்கதானே தம்பிகளா ஆளுக்கு ஒரு வோட்டு போடுங்க; யாரும் கண்டுபிடிக்காத மாதிரியான வாக்கினை தேர்ந்து தருகிறோம் எனச் சொல்ல, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! இதற்கிடையே வாக்குப் பதிவு நடந்தபடியே இருந்தது; புதிய பகுதி என்பதால் நாங்களும் தயங்கிக் கொண்டிருந்தோம் கள்ள வாக்களிக்க!
  
    இந்நிலையில் எங்களின் திமுக அலுவலகம் அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது திமுக கொடியுடன். அதிலிருந்து இருவர் இறங்கி, சின்னம் பொறித்த வாக்கு விவரத் தாள்களைக் கட்டுக்கட்டாக எடுத்து, அந்த அலுவலகத்தில் கொடுத்து, கண்டிப்பாக இந்தத் தாளில்தான் (door slip) வாக்களிக்க வருகின்ற வாக்காளர்களுக்கு வாக்கு விவரங்களை எழுதித் தந்து உள்ளே சென்று வாக்களிக்கச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள்; அதன் பிறகு நிறைய பேர் வந்து சீட்டினைப் பெற்று வாக்களித்துச் சென்றனர். என் நண்பனிடம் நான் சொன்னேன்; கவலைப்படாதே நாம்தான் இந்தத் தேர்தலில் வெல்வோம் என்று. "எப்படி' என்றான். "அந்த டோர்சிலிப்பில் இருப்பது வாக்காளர்கள் விவரம் மற்றும் சின்னம் என்று தானே நாம் நினைத்தோம்; அது சின்னம் அல்ல; இப்போதைக்கு நம்மவர்கள் கண்டுபிடித்த புது டெக்னிக். அதாவது, உதயசூரியன் சின்னத்திற்குப் பதிலாக, எம்ஜியார் ஒரு குழந்தைக்கு சத்துணவு ஊட்டுவது போன்ற படம் அச்சிடப்பட்டிருக்கிறது; இந்த சீட்டைக் கையில் எடுத்து வருவது நமது அதிமுகவினர்தான் அது கள்ள வாக்காக இருந்தாலும் நாம் விட்டுவிடுவோம் என்று உள்ளே இருக்கும் அதிமுகவினர் கருதுவார்கள்; தேர்தல் முடிய இன்னும் ஒரு மணி நேரமே உள்ளது; முடிந்தவரை குத்திவிடுவோம் என நம் ஆட்கள் செயல்படத்  துவங்கிவிட்டனர்; எனவே வெற்றி நமக்குத்தான்" என்றேன். அதேபோல் வந்த ஆட்டோவும் அடுத்தடுத்த திமுக தேர்தல் பணிமனைகளுக்குச் சென்று தன் பணியைச் செவ்வனே தொடர்ந்தது. அதிமுக, மது மற்றும் பிரியாணி மயக்கத்தில் இருந்தது.

  தேர்தல் முடிவு வெளியானது. திமுகழகத்தின் அன்றைய புதிய சென்னை மாவட்டச் செயலாளரான டி.ஆர்.பாலுவின் உழைப்பு வீணாகவில்லை; திமுக வென்றது அண்ணாநகரில்.1977-ல் அனுபவமற்ற அதிமுகவிடம் இதே தொகுதியில் கலைஞரவர்கள் வெற்றியா தோல்வியா எனக் கண்ணாமூச்சி ஆட்டத்தின் முடிவில் சுமார் 600 வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இம்முறை சோ.மா. ராமச்சந்திரன் சுமார் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். எனக்கும் என் நண்பனுக்கும் அளவற்ற மகிழ்ச்சி!

   திமுகவின் தொண்டனாக இருந்தபோதிலும் நான் அப்போதே பல கட்சிகளின் செயல்களையும் அதன் முக்கியஸ்தர்களின் பேச்சினையும் விரும்பிக் கேட்பேன்; பத்திரிகைகளையும். அந்த வழியில் துக்ளக் படிப்பது வழக்கம்; அந்த வார துக்ளக்கில் அண்ணாநகர் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஒரு பெட்டிச் செய்தியொன்று வந்திருந்தது; அதில், 'அத்தொகுதியில் திமுக வென்றது, கள்ள வாக்குகளினால்தான்; சென்னை மாவட்ட செயலாளர் பார்வையில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேலாக கள்ளவாக்குகள் பதிவிடப்பட்டிருந்தது' என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கடுத்த துக்ளக் இதழில், ஒரு வக்கீல் நோட்டீஸ் டி.ஆர்.பாலுவின் சார்பில் அனுப்பப்பட்டு, அந்த இதழிலேயே பிரசுரமும் செய்யப்பட்டிருந்தது. அதில், அம்மாதிரியான மோசடிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும், மான நஷ்டவழக்கு போடப்போவதாகவும் அது தெரிவித்தது. பதிலாக, துக்ளக் பத்திரிகையும் அந்த வழக்கைச் சந்திக்கவும், எங்களது செய்தி தவறானதல்ல என்று நிரூபிக்கப் போவதாகவும் சொன்னது. அதன் பிறகு, யாரும் யாரையும் கண்டுகொள்ளவே இல்லை! 

இப்பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளத் தயார்.



* (வெறிகொண்டது அந்தக் காலகட்டத்தில்; எந்தக் கட்சியின் மீதும் இப்போது வெறி இல்லை; அதனால் ஏற்பட்ட இழப்புகள் மட்டுமே உண்டு மனதில்).
                                                                                படங்கள் உதவி: Google Image 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக