வியாழன், 22 ஜூன், 2017

படித்ததில் ஒன்று

    திரு. மா.காமுத்துரை அவர்களின் முற்றாத இரவொன்றில் நாவலை 5.9.2012 அன்று வாசித்தேன்.இது ஒரு காதல் கதைதான்; அதுவும் ஒன்றிணைந்து வாழ வழிவிடாத பெற்றோர்களை விட்டு ஓடிப்போகும் காதலர்களின் கதைதான்.காதலர்கள் காதலிக்க செய்யும் முயற்சிகளையோ, அவர்களின் சாகசங்களையோ, ரசமான காதல் வர்ணனை களையோ காட்டும் கதை அல்ல.

  கதைநாயகர்கள் மாயனும் வசந்தியும் உயிருக்குஉயிரான காதலர்கள்.தங்கள் வீடுகளில்மணம் செய்ய ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதால் ஊரைவிட்டு ஓடி,பதினைந்து நாட்களாக தெரிந்தவர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் ஒளிந்துகொள்கிறார்கள்; அந்த 15-வது மாலையில் பெண் வீட்டார் தூரத்தில் உள்ள ஒரு ஊரில் நண்பனின் வீட்டில் மாயனும் வசந்தியும் இருப்பதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். பெண்ணின் தந்தை தனது ஊரின் நாட்டாமை மற்றும் சிலரையும் அழைத்துக்கொண்டு மாயன் வசந்தி இருக்கும் ஊருக்குச் சென்று அந்த வீட்டாரிடம் நயமாக பேசி இருவரையும் அனுப்பிவைக்கும்படி கேட்க, வசந்தி மாயன் அவனது நண்பனும் உடன்செல்ல மறுக்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக் கருதி அந்த ஊரைவிட்டு தங்கள் ஊருக்குத் திரும்பி,அன்று இரவே அந்த இளவட்டங்களை பிரித்துக்கொண்டுவர ஏற்பாடுகளை செய்கிறார்கள்; அதே நாளிரவில் தோழன் சோனைமுத்து வீட்டிலும் காதலர்களை காப்பாற்றும் பொருட்டு அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுகிறார்கள்.இப்படி மாலை முதல் இரவு விடியும் வரை இரு தரப்பிலும் நடக்கும் சம்பவங்களை மிகவும் யதார்த்தமாக சுவையுடனும் இயல்பாகவும் எழுதி இருக்கிறார் நாவலாசிரியர்.

   என்னதான் ஒரே சாதியாக இருப்பினும் இந்த காதலர்கள் விஷயத்தில் ஏழை பணக்காரன் என்ற வர்க்கபேதம் தலையிடுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க சிவப்புத் தோழர் தன் வழியிலும் மாயனின் தந்தை ஒரு வழியிலும் நாட்டாமை ஒரு வழியிலும் அவரை அழுத்த நினைக்கும் மைனரும் அவனது கையாள் ராசப்பனும் மற்றொரு வழியிலும் செயல்படுகிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த வசந்தியின் தாய் தனக்கு ஆதரவாக செயல்பட இவர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்னும் முடிவுடன் நிலை தடுமாறி பைத்தியம் பிடித்தவள்போல் அலைகிறாள்.அந்த முற்றாத இரவின் முடிவுகளை தனது மெல்லிய ஒளியினைப் பாய்ச்சி தானே சாட்சியாகி நிற்கிறது வட்ட நிலா!

    இது விமர்சனம் அல்ல.மற்றவர்களுடன் பகிர்வு மட்டுமே!ஒரு சிறு குமிழிதான்!

நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக