சனி, 20 ஏப்ரல், 2019


அடித்தள
 மக்கள் வரலாறு:
 

                          ஆ
.சிவசுப்பிரமணியன்
.

வெள்ளையர்
ஆட்சியில் காரன்வாலிஸ் காலத்தில் 1786-ல் கொண்டுவரப்பட்ட நிலவரி முறை, கிழக்கிந்திய கம்பெனிக்கு நல்ல வருவாய் ஈட்டித் தந்தது; எனினும், விளைச்சலற்ற காலங்களில் வரி செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்தனர்; எனவே, இம்முறையைக் கைவிட்டு, இரயத்வாரி எனும் புதிய நிலவரியை அறிமுகப்படுத்தினார் தாமஸ் மன்ரோ.
இந்த இரயத்வாரி முறையில் கர்ணம் அல்லது கணக்குப்பிள்ளை எனும் பதவியில் உள்ளவர்களின் கொள்ளைகளைப் பற்றி தாமஸ் மன்ரோவே நிலவருவாய் கழகத்திற்கு கடிதம் எழுதுகிறார் கீழ்க்கண்டவாறு: (அவர் நெல்லை மாவட்ட ஆட்சியராக 1823 - 1826 வரை இருந்தபோது):
"
கிராம முன்சீப்களும், நாட்டாண்மைக்காரர்களும், மிராசுதாரர்களும், கர்ணங்களும் மிக நல்ல நிலங்களை எல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஆனால் தரம் குறைந்த நிலங்களுக்கு உரிமையாளராக இருக்கும் உழவர்களிடம் அதிகமான வரி வசூலித்து அவர்களைத் துன்புறுத்துகின்றனர்"(ராமசாமி 1990: 756,757).
"
கர்ணம் சர்க்காருக்கும் குடியானவர்களுக்கும் பொதுவான அதிகாரி; பொதுவாக இரு தரப்பையும் ஏமாற்ற முயல்வார்" என்கிறார் அன்றைய வேறொரு ஆட்சியர்(நீல்மணி முகர்ஜி 1962: 234).
                          

நூலிலிருந்து சிலதுளிகள்: 2.

அன்றைய திருவாங்கூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகக் குமரி மாவட்டம் இருந்தபோது, பண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடாக இருந்த தோள்சீலைப் போராட்டத்தினைப் பற்றி ஒரு நொடிக்கதை ஒன்று உலவி வந்ததைப் பார்ப்போம்:
இன்றைய குமரி மாவட்டத்தின் மேற்கே உள்ள விளவங்கோடு பகுதியைச் சுற்றிப் பார்க்க மூலம் திருநாள் மன்னர் வந்தார். மன்னரின் வருகைக்கு முன்னேற்பாடு செய்ய அப்பகுதிக்கு வந்த பேஷ்கார், நன்றாகக் குளித்து சுத்தமாக ஆடை அணிந்து மன்னரை வரவேற்கும்படிக் கூறிச் சென்றார். குறித்த நாளில் மன்னரும் அங்கு வந்தார். ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மன்னரை வரவேற்கக் கூட்டமாக நின்றனர். அப்பெண்கள், கூட்டத்தை மன்னர் கடக்கும்போது இடுப்பு ஆடையைத் தூக்கிப் பெண் உறுப்பைக் காட்டினார்கள்.
மன்னர் அக்காட்சியைப் பார்த்தாலும் ஒன்றும் கூறாது அமைதியாகச் சென்றுவிட்டார். கோபமாக வந்த பேஷ்கார் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டீர்களே என்று சத்தமிட, அம்மக்களும் பதட்டமின்றி, இதுவரை வெள்ளாளர்களுக்கும், நாயர்களுக்கும் திறந்த மார்பைக் காட்டி வந்தோம். அவர்களைவிட மேலான மகாராஜா வரும்போது அவர்களுக்குக் காட்டாத ஒன்றைக் காட்டுவதுதானே மரியாதை; அதனால்தான் மரியாதைக்காக இப்படிச் செய்தோம் என்று கூறினார்கள். பேஷ்கார் பதில் எதுவும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார் (.கா.பெருமாள்: 6-6-99).”
என்னுரை: இதுதான் ராஜமரியாதை என்பதோ….! என்றாலும் இது கதையில்தான். இது நொடிக்கதை என அழைக்கப்படுகிறது.

திங்கள், 15 ஏப்ரல், 2019

விந்தை மனிதர்கள்!

ஒருமுறை செங்கல்வராயப் பிள்ளை என்பவர், திருப்புகழ், கந்தரலங்காரம் கந்தரனுபூதி ஆகிய நூல்களைத் திரட்டி புதிய நூலாக வெளியிட்டு அதை உ.வே.சா அவர்களிடம் தந்தார். அதைப் படித்தறிந்த உ.வெ.சா. திடீரென செங்கல்வராயப்பிள்ளையின் கைகளைக் கண்களில் ஒற்றிக்கொண்டார், பதறிப்போன செங்கல்வராயப்பிள்ளை, என்ன காரியம் செய்தீர்கள்? என்றார்.
உ.வெ.சா., தமிழின் பெருமைகளை ஆராய்ந்த புனிதக் கரங்களாயிற்றே அதனால்தான் அந்தக் கைகளை ஒற்றிக்கொண்டேன் என்றார்.
நெகிழ்ந்துபோன செங்கல்வராயப்பிள்ளை விடைபெற்றுக்கொண்டு நாலடி நடந்தவர், திரும்பவும் உ.வெ.சாவிடம் வந்தார். எதிர்பாராத விதமாக அவரது காலில் விழுந்து பாதங்களைக் கண்ணில் ஒற்றிக்கொண்டார்.
இம்முறை பதறியவர் உ.வெ.சா. பிள்ளை என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள் என்றார். சங்க இலக்கியங்களை பழந்தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தேடியலந்த திருப்பாதங்களாயிற்றே என்று கண்ணீர் மல்கக் கூறினார் பிள்ளை. எத்தனைப் பெருமை மிக்கவர் உ.வெ.சா.

--- 'வரலாற்றில் அரிய நிகழ்வுகள்' எனும் நூலிலிருந்து.


வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்


நார்ட்டன் எனும் புகழ்பெற்ற ஆங்கில வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருந்தார். 'சான் வாலீஸ்' என்ற நீதிபதியும் இன்னொரு இளைய நீதிபதியும் அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். "நார்ட்டன்" புத்தகங்களைப் புரட்டி அவைகளிலிருந்து நீண்ட பகுதிகளைப் படித்துக் காட்டியவாறு இருந்தார். "நார்ட்டன்" தனது குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் இடத்திற்குத் தகுந்தாற்போல் படித்ததால், நீதிபதி 'சான் வாலீசின்' காதில் தாலாட்டு மாதிரி பட்டது போலும். 'சான் வாலீசின்' கண்கள் மூடின. தலை நெஞ்சில் புதைந்தது. அது போலவே நீதிபதி 'சான் வாலீசின்' டபேதாரையும் தூக்கம் ஆட்டவே, அவனும் தூங்க ஆரம்பித்தான். இதைக் கவனித்த "நார்ட்டனுக்கு" சிறிது ஆத்திரம் வந்தது. அவர் தன் முன்னால் இருந்த புத்தகக் கட்டைத் தள்ளினார். அது தரையில் விழுந்து பெரும் சத்தத்தை எழுப்பியது. டபேதார் தூக்கத்திலிருந்து தடால் என எழுந்தான். நீதிபதி 'சான் வாலீசும்' திடீரென்று கண்விழித்தார்.
"நார்ட்டன்" 'மாண்புமிகு நீதிபதியே நான் வருந்துகிறேன் எனக் கூறினார்.
"ஏன் என்ன விஷயம் நார்ட்டன்?"
" ஓ, ஒன்றுமில்லை. அய்யா, டபேதார் தானும் ஒரு நீதிபதியைப்போல் நீதிமன்றத்தில் தூங்கமுடியும் என்று கருதுகின்றான்" என்று அமைதியாகப் பதிலளித்தார் "நார்ட்டன்"
---"வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்" அய்யா.பொ.வேல்சாமி  அவர்கள் 

முகநூலில்
 அடையாள காட்டிய மிகச் சிறந்த, சட்டத்துறை வரலாறும், சுவையான நிகழ்ச்சிகளும் நிறைந்த நல்ல நூல்.