ஞாயிறு, 23 ஜூலை, 2017

நான் அறிந்த வகையில்:



தமிழருவி மணியன்:

 
 பள்ளியை விரும்பாமல் வேலைக்கும் செல்லாமல் சோம்பித்திரிந்த காலமது. 1980. அரசியல் பற்றிய ஆர்வம் வளரத் துவங்கிய நேரமது. ஆர்வத்துடன் சிற்றிதழ்கள் முதல் நாவல்கள் போன்றவை எல்லாம் வாசிக்கத் துவங்கிய தருணமது.

    வீட்டின் அருகே,
 பொதுக்கூட்டம் எனச் சொல்லி நடைபெறும் கட்சிக் கூட்டங்களை விரும்பிக் கேட்பதுண்டு; பெரும்பாலும் திமுகவின் கூட்டம்தான். இரட்டை வசனங்கள் அதிகம் எனினும், சரியான விமர்சனங்கள் பொங்கிவரும்.
  அதிமுக கூட்டத்தில் சுவை இருக்காது; கருத்து இருக்காது; கலைநிகழ்ச்சி எனும் பேரில் திரைமெட்டில் தாங்கள் தழுவிய பாடல்களைப் பாடுவார்கள்; கருணாநிதியை அர்ச்சிப்பது - எம்ஜியாரைப் புகழ்வது (துதிப்பது அல்ல;அது ஜெயா காலத்தில் வந்தது) என்பதே அதிமுகவின் பொதுக்கூட்டம்; விதிவிலக்காக அப்போதெல்லாம் குத்தாட்டம் கலப்பதில்லை!

  திடீரென ஒருநாள் காலை பாரதி மேடை அமைப்பு எனும் கம்பெனியின் மேடையானது முச்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும்; மாலையில் மேடையை தூரத்தில் இருந்து பார்க்கும்போதே தெரிந்துவிடும் எந்தக்
கட்சியின் கூட்டம் என்று. மேடை முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட உள்ளூர்த் தலைவர்கள் அமர்ந்திருக்க கீழே பார்வையாளர்கள் யாருமே இல்லை என்றால் அது இந்திரா காங்கிரசின் பொதுக்கூட்டம்! ஆம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்பதுபோல எல்லோருமே இக்கட்சியில் தலைவர்கள்தாம்! தொண்டர்களோ யாரும் இல்லை?



  மேற்கண்ட அமைப்புடன் ஒருநாள் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது; நான் வழக்கம்போல் காங்கிரசின் கூட்டம் எனக் கருதி வீட்டுக்குச் சென்று முகம் கழுவிவிட்டுப் பின்பு வரலாம் என வீடு நோக்கி நகர்ந்தேன்; ஆனால், என் காதுகள் கூட்டத்தில் உரையாற்றும் பேச்சாளரின் வீச்சின் பக்கமிருந்து விலக மறுத்தது. அரசியல் கூட்டம்தான் என்றாலும் அந்த உரையானது, நிதானமாக, தடையின்றி, எளியவருக்கும் புரியும் வண்ணம் அரசியலோடு  இலக்கியத்தையும் கலந்து செவியினைக் குளிர வைத்தது! அவரது பேச்சின் துவக்கத்தில் பார்வையாளராக நான் சென்ற நேரத்தில் ஒரு இருபது முதல் முப்பது பேர்கள் வரைதான் இருந்தனர்; யாரும் அசையாமல் கட்டிப்போட்ட அந்த உரைவீச்சு முடியும்போது, சுமார் இருநூறு பேர்களுக்கும்மேல் அங்கிருந்து கலைந்து சென்றனர்; அப்போது வளர்முகத்தில் இருந்த அவரது பல கூட்டங்களிலும் இதுவே வாடிக்கையானது; இவ்வாறு எனக்கு அறியவந்தவர்தான் தமிழருவி மணியன்; அன்றைய ஜனதாக் கட்சியின் பேச்சாளராக!
                                                                               தொடர்வேன்......